Thursday, July 12, 2018

தமியான் இல்லம் - நிலக்கோட்டை

தமியான் இல்லம் - நிலக்கோட்டை 

'பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்
கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்
தொழுநோயாளர் நலமடைகின்றனர்
ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.'       மத். 11:5

என்ற இறைவார்த்தைக்கேற்ப 1967 ஜூலை மாதம் மதுரையின் இரண்டாவது பேராயராகப் பொறுப்பேற்ற மேதகு ஜஸ்டின் ஆண்டகை அவர்கள் அப்போது அமலவையின் அதிபராயிருந்த அன்னை ஏர்னெஸ்டின் மேரியிடம், முதியோர் இல்லம், ஊனமுற்றோர் பள்ளி, தொழுநோய் தடுப்பு நிலையம் ஆகிய மூன்று பணிகளுள் ஏதாவது ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை முன் வைத்தார். ஆயர் அவர்களின் விருப்பத்திற்கு இசைந்த அன்னை ஏர்னெஸ்டின் மேரி அவர்கள் தொழுநோய்த் தொண்டர் 'தமியான'; பெயரால் தமியான் தொழுநோய் தடுப்பு நிலையத்தைத் தொடங்கினார். தொழுநோய் வரமால் தடுப்பது, உடல்நலமற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, சமுதாயத்தில் முழு மனிதனாக நாமும் வாழ முடியும் என்ற நம்பிக்கை ஊட்டுவது மட்டுமே நோக்கமாக இருந்த இந்த இல்லம் இன்று பார்வையற்றவர் பார்வை பெற தமியான் கண் மருத்துவமனை, மனவளர்ச்சி குன்றியோர் கல்வியறிவு பெற லில்லியான் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, ஏழை மக்களுக்கு பொது மருத்துவ சிகிச்சை அளிக்க சோபியா மருத்துவமனை, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு பெற இனிய உதயம் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகம், ஏழைக் குழந்தைகள் ஆங்கில அறிவு பெறுவதற்கான தமியான் பப்ளிக் பள்ளி என பல்வேறு நிறுவனங்களின் வழியாக ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து வருகின்றது. நாளுக்கு நாள் வளர்ச்சியை நோக்கி மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றி வரும் இவ்வில்லம் தனது 50ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. நேற்று அதன் தொடக்க விழாவாக முகப்புக்கட்டிடம் அதிபர் அன்னை சகோ. ஆன்டனி சேவியர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அருட்தந்தை மரிவளன் சே.ச அவர்கள் அக்கட்டிடத்தை அர்ச்சித்துப் புனிதப்படுத்தினார். மதுரை மாநிலத்தலைவி சகோ. ஞான சௌந்தரி அவர்களால், 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த 50 விளக்குகளின் முதல் ஒளி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்புத் திருப்பலி மூன்று அருட்தந்தையர்களால் நிறைவேற்றப்பட்டது. திருப்பலியின் முடிவில் தொழுநோய்த் தொண்டர் தமியான் அவரின் உருவப்படம் அர்ச்சிக்கப்பட்டு ஆலயத்தின் முன் வலப்புறம் வைக்கப்பட்டது. அதன்பின் தமியான் வளாகத்தின் நிர்வாகி முன்னாள் அதிபர் அன்னை சகோ. ஆக்னஸ் சேவியர் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று நன்றிகூறி அன்பளிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் அதிபர் அன்னை, மூன்று மாநிலத்தலைவிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் சகோதரிகள், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள், மாணவச் செல்வங்கள், பணியாட்கள் மற்றும் பயனாளிகள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவின் மகிழ்வை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் இனிய விருந்து வழங்கப்பட்டது. 



No comments:

Post a Comment