Monday, July 23, 2018

புனித அந்தோணியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாமரைப்பாடி – திண்டுக்கல்

புனித அந்தோணியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தாமரைப்பாடி – திண்டுக்கல்


 'பெண்களைப் படிக்க வைப்பதும், பக்குப்படுத்துவதும் இறைவழிபாட்டிற்குச் சமம்' என்றார் நேரு. பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து, அதற்குமேல் படிக்க வைக்க இயலாத குடும்பங்களில் இருந்து வெளிவரும் இளம் பெண்கள் மில் வேலைக்குச் சென்று, வாழ்க்கையை தொலைத்துவிடும் திண்டுக்கல் மாவட்டத்தில், பெண்களின் வாழ்வு முன்னேற உயரிய நோக்கத்தோடு தொடங்கப்பட்ட புனித அந்தோணியார் கலை கல்லூரி, இன்று தொலைநோக்குப் பார்வையோடு பெண்களின் வாழ்வு முன்னேற உழைத்து வருவது சிறப்புக்குரியது. திண்டுக்கல் மாவட்டத்தில் அதிவேகமாக வளர்ச்சிப்பாதையில் முன்னோக்கி பயணிக்கிறது இக்கல்லூரி. இளம் பெண்களின் அறிவுத்தாகத்தைத் தீர்த்து சமுதாயத்தின் விடிவெள்ளிகளாக அவர்களை ஒளிரச் செய்கின்றது. மாணவியர் அறிவியல், கலை மற்றும் தொழில் நுட்பத்தில் வளரவும், அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு, உள நலம் மற்றும் மன நலம் பேணப்படும் விதமாக பல பயிற்சிகள் இக்கல்லூரியில் அளிக்கப்படுகிறது. இன்று இக்கல்லூரியில் மதுரை மாநிலத் தலைவி சகோதரி ஞான சௌந்தரி அவர்களால் அமலா கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது. திண்டுக்கல் ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்களால் இக்கட்டிடம் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது. மேதகு ஆயர் அவர்களுடன் 8 அருட்தந்தையர்கள்; இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது. வந்திருந்த அனைவரையும் கல்லூரியின் செயலர் சகோதரி மார்கிரேட் இன்பசீலி அவர்கள் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் சகோதரி பிரமிளா மேரி அவர்கள் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார். அதன்பின் மிகச்சிறந்த வகையில் கல்லூரி மாணவிகளால் சிறிய கலைநிகழ்ச்சி 'பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்டு' வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் விருந்து அனைவருக்கும் பகிரப்பட்டது.

Thursday, July 12, 2018

தமியான் இல்லம் - நிலக்கோட்டை

தமியான் இல்லம் - நிலக்கோட்டை 

'பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்
கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்
தொழுநோயாளர் நலமடைகின்றனர்
ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.'       மத். 11:5

என்ற இறைவார்த்தைக்கேற்ப 1967 ஜூலை மாதம் மதுரையின் இரண்டாவது பேராயராகப் பொறுப்பேற்ற மேதகு ஜஸ்டின் ஆண்டகை அவர்கள் அப்போது அமலவையின் அதிபராயிருந்த அன்னை ஏர்னெஸ்டின் மேரியிடம், முதியோர் இல்லம், ஊனமுற்றோர் பள்ளி, தொழுநோய் தடுப்பு நிலையம் ஆகிய மூன்று பணிகளுள் ஏதாவது ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை முன் வைத்தார். ஆயர் அவர்களின் விருப்பத்திற்கு இசைந்த அன்னை ஏர்னெஸ்டின் மேரி அவர்கள் தொழுநோய்த் தொண்டர் 'தமியான'; பெயரால் தமியான் தொழுநோய் தடுப்பு நிலையத்தைத் தொடங்கினார். தொழுநோய் வரமால் தடுப்பது, உடல்நலமற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, சமுதாயத்தில் முழு மனிதனாக நாமும் வாழ முடியும் என்ற நம்பிக்கை ஊட்டுவது மட்டுமே நோக்கமாக இருந்த இந்த இல்லம் இன்று பார்வையற்றவர் பார்வை பெற தமியான் கண் மருத்துவமனை, மனவளர்ச்சி குன்றியோர் கல்வியறிவு பெற லில்லியான் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, ஏழை மக்களுக்கு பொது மருத்துவ சிகிச்சை அளிக்க சோபியா மருத்துவமனை, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு பெற இனிய உதயம் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகம், ஏழைக் குழந்தைகள் ஆங்கில அறிவு பெறுவதற்கான தமியான் பப்ளிக் பள்ளி என பல்வேறு நிறுவனங்களின் வழியாக ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து வருகின்றது. நாளுக்கு நாள் வளர்ச்சியை நோக்கி மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றி வரும் இவ்வில்லம் தனது 50ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. நேற்று அதன் தொடக்க விழாவாக முகப்புக்கட்டிடம் அதிபர் அன்னை சகோ. ஆன்டனி சேவியர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அருட்தந்தை மரிவளன் சே.ச அவர்கள் அக்கட்டிடத்தை அர்ச்சித்துப் புனிதப்படுத்தினார். மதுரை மாநிலத்தலைவி சகோ. ஞான சௌந்தரி அவர்களால், 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த 50 விளக்குகளின் முதல் ஒளி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்புத் திருப்பலி மூன்று அருட்தந்தையர்களால் நிறைவேற்றப்பட்டது. திருப்பலியின் முடிவில் தொழுநோய்த் தொண்டர் தமியான் அவரின் உருவப்படம் அர்ச்சிக்கப்பட்டு ஆலயத்தின் முன் வலப்புறம் வைக்கப்பட்டது. அதன்பின் தமியான் வளாகத்தின் நிர்வாகி முன்னாள் அதிபர் அன்னை சகோ. ஆக்னஸ் சேவியர் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று நன்றிகூறி அன்பளிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் அதிபர் அன்னை, மூன்று மாநிலத்தலைவிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் சகோதரிகள், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள், மாணவச் செல்வங்கள், பணியாட்கள் மற்றும் பயனாளிகள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவின் மகிழ்வை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் இனிய விருந்து வழங்கப்பட்டது. 



Friday, July 6, 2018

அகுஸ்தினார் நற்செய்திப்பணி மையம் - சிலுக்குவார்பட்டி

அகுஸ்தினார் நற்செய்திப்பணி மையம் - சிலுக்குவார்பட்டி

'தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே அறிந்து பிறக்கும் முன்பே உன்னை திருநிலைப்படுத்தினேன். மக்களினங்களுக்கு இறைவாக்கினராக உன்னை ஏற்படுத்தினேன்' என்று எரேமியாவிற்கு அருளப்பட்ட இறைவாக்கின்படி துறவிகளாகிய ஒவ்வொருவரையும் இறைவன் இறைவாக்குரைக்கும் பணிக்கென அழைத்துள்ளார். 'எளிமை அன்பு வழியில் எளியோருக்கு நற்செய்தி' அறிவிக்கவே என்று தூய ஆவியின் வல்லமையால் தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்து தொழுகைக் கூடத்தில் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவித்தார் இறைமகன் இயேசு. அவரது வழி சென்று மதுரை மாநில சகோதரிகள் நற்செய்திப் பணியை அமலவை பிறந்து வளர்ந்த பங்குகளில் அறிவிக்கவும், இன்னும் பிற இடங்களிலும் நற்செய்தியை பறைசாற்றுவதுமே இம்மையத்தின் நோக்கம். 

06.07.2018 இன்று சிலுக்குவார்பட்டி பங்குத்தந்தை பால்ராஜ் அவர்கள் இவ்வில்லத்தை ஆசீர்வதித்து புனிதப்படுத்தினார். பொது ஆலோசகர் சகோதரி தனசீலி செங்கோல் கட்டிடத்தையும், மதுரை மாநிலத் தலைவி சகோதரி அ. ஞானசௌந்தரி கல்வெட்டையும் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து அருட்தந்தை இஞ்ஞாசி நற்செய்திப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளர், சிலுக்குவார்பட்டி பங்குத்தந்தை, நிலக்கோட்டை பங்குத்தந்தை பிரபு மூவரும் இணைந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினர். இந்நிகழ்விற்கு நம் மதுரை மாநில அன்னை, மாநிலதுணைத்தலைவி மற்றும் அவரது நிர்வாகக் குழுவினர்களும், முன்னாள் அதிபர் அன்னை சகோ. ஆக்னஸ் சேவியர் அவர்களும், சபைத்தலைமையகத்திலிருந்தும், சிவகங்கை மற்றும் பாளை மாநிலங்களிலிருந்து சகோதரிகளும், சிலுக்குவார்பட்டியைச் சுற்றியுள்ள அமலவைக் குழுமங்களிலிருந்து சகோதரிகளும், அமலவைத் தோழர்களும், ஊர்ப்பெரியவர்களும் வருகைதந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இந்நிகழ்வை சிறப்புறச் செய்தனர். திருப்பலியின் முடிவில் அனைவரும் விருந்துண்டு மகிழ்ந்தனர். மனநிறைவோடு தங்கள் இல்லம் திரும்பினர்.

Thursday, July 5, 2018

நற்செய்திப்பணி மையம் திறப்புவிழா - சிலுக்குவார்பட்டி

'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் 
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'. - மாற். 16:15

என்ற இறைவார்த்தையைத் தம் திருத்தூதர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார் ஆண்டவர் இயேசு. அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். நற்செய்தி அறிவிக்க வேண்டுமென நான் ஆர்வம் கொண்டுள்ளேன். (உரோ. 1:15) என்றுரைத்து தனது வார்த்தைகளாலும், வாழ்க்கையாலும் கிறிஸ்துவாகிய நற்செய்தியை அறிவித்த புனித பவுல் அடியாரைப் போல நற்செய்திப் பணியாற்ற தாம் முன் குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார் (உரோ.8:30). அதன்படி நமது நிறுவுனர் தந்தை அகுஸ்தின் பெரைரா அவர்கள்  முதன்முதலாக தம் காலடி பதித்து இறைவார்த்தையை சிலுக்குவார்பட்டி மண்ணில் வேரூன்றச்செய்தார். அவர் அடியொற்றி,  அவரின் நினைவாக, இன்று இவ்விடத்தில் நற்செய்திப்பணிக்கென்று 'அகுஸ்தினார் நற்செய்திப்பணி மையம்' எனப் பெயரிட்டு துவங்கப்பட்டுள்ளது. 
எளிமை, அன்பு, எளியோர்க்கு நற்செய்தி என்னும் தனிவரத்தை வாழ்வாக்கிட, சகோதரிகள் இவ்வில்லத்திலிருந்து நற்செய்திப்பணி செய்வதோடு, இப்பணிக்கென்று மக்களை தயாரிக்கவும், அவர்களை வழிநடத்தக் கூட்டமும், பணியைப் பற்றிய திறனாய்வும் செய்வர். இவ்வில்லத்தின் அர்ச்சிப்பு நாளை 06.07.2018 அன்று நடக்க இருப்பதால் அனைத்து அமலவைச் சகோதரிகளும் தங்கள் செபத்தால் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.