Friday, July 5, 2019

தமியான் இல்லம் - பொன்விழாக் கொண்டாட்டம்

திருப்புமுனை முயற்சிகளால் மட்டுமல்ல, தினம் தினம் எடுக்கப்படும் தீர்மானங்களாலும், நிகழ்த்தப்படும் செயல்பாடுகளாலும் வரலாறு வளருகிறது. இந்த வரிகளுக்கு அனுபவப்பூர்வ அர்த்தம் கொடுப்பதுதான் தமியான் இல்லம். முன்னோக்குப் பார்வையும், முறையான நெறிமுறையும் கொண்ட முன்னோர்களால் ஆரம்பிக்கப்பட்டு, தியாகச் செயல்வீரர்களால் தொடரப்படும் பல்வேறு பணிகளால் வரலாறு படைக்கின்றது தமியான் வளாக நிறுவனங்கள். கடந்த 50 ஆண்டுகளாகக் (1969 – 2019) கிறிஸ்துவின் குணமாக்கும் பணியைத் தொடர்ந்து ஆற்றிவரும் தமியான் நிறுவனத்தின் பொன்விழா நிகழ்வானது 04.07.2019 அன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இறைநம்பிக்கையை அச்சாணியாகக் கொண்டு, கட்டளை செபத்தை ஆயுதமாகக் கொண்டு, தொழுநோய் புண்கள் படிந்த உடல்கள் குணம் பெற தன்னை முழுமையாக அர்ப்பணித்த புனித தந்தை தமியான் அவர்களின் உருவச்சிலை, சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு சூசை மாணிக்கம் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு, அருட்தந்தை ஜோசப் ஆன்டனி ராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தமியான் பப்ளிக் பள்ளிக்கென அமைக்கப்பட்ட கலையரங்கத்தின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்கள் ஆசீர்வதித்து அர்ச்சித்து புனிதப்படுத்தினார். மதுரை மாநிலத்தலைவி அருட்சகோதரி ஞான சௌந்தரி அவர்கள் திறந்து வைத்தார். அமலவையின் முன்னாள் அதிபர் அன்னை அருட்சகோதரி ஆன்டனி சேவியர் அவர்கள் ஒளியேற்றினார். அதன்பின்பு புனித தமியான் பப்ளிக் பள்ளியின் கலையரங்கம் மற்றும் உள்விளையாட்டு அரங்கத்தை மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்கள் ஆசீர்வதித்து புனிதப்படுத்த, அமலவையின் அதிபர் அன்னை அருட்சகோதரி ஆன்டனி புஷ்ப ரஞ்சிதம் அவர்கள் திறந்து வைக்க, அமலவையின் முன்னாள் அதிபர் அன்னை அருட்சகோதரி மேரி ஜோசபா அவர்கள் 18 திரிகளைக்கொண்ட குத்துவிளக்கின் முதல் முகப்பினை ஏற்றினார். அவரைத் தொடர்ந்து மேனாள் அன்னையர்கள், மாநிலத்தலைவியர் திரிகளை ஏற்றினர். அதன்பின்பு பேராயர் மற்றும் ஆயர் பெருமக்கள் அனைவரும் இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி, இறையருளை நிறைவாகப் பெற்றுத் தந்தனர். திருப்பலி முடிந்த பின்பு, தமியான் வளாக நிர்வாகி மருத்துவர் அருட்சகோதரி ஆக்னஸ் சேவியர் அவர்கள் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று, பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார். அதன்பின்பு சிறிய கலைநிகழ்ச்சி லில்லியான் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்களால் வழங்கப்பட்டது. மதுரை மாநிலத்தலைவி அருட்சகோதரி ஞானசௌந்தரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். பொன்விழாவை முன்னிட்டு தமியான் இல்ல நிறுவனங்களால் பயன்பெற்ற பயனாளர்ளுக்கும், ஏழைஎளிய குடும்பத்தினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மூன்று மாநிலத்தலைவியர்களால் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது. சபையின் அதிபர் அன்னை அருட்சகோதரி ஆன்டனி புஷ்ப ரஞ்சிதம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி அவ்வளாக நிர்வாகி மருத்துவர் அருட்சகோதரி ஆக்னஸ் சேவியர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி உற்சாகப்படுத்தினார். தமியான் நிறுவனங்களின் சேவைகளைப் பாராட்டி மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்கள் ஆசியுரை வழங்கி அதிபர் அன்னை, அன்னை ஆக்னஸ் சேவியர், மதுரை மாநிலத்தலைவி மூவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து தமியான் இல்லம் தொடங்கப்பட்ட நாள் முதல் இந்நாள் வரை சகோதரிகள் ஆற்றிய தொழுநோய் தடுப்புப்பணி, காசநோய் தடுப்புப்பணி, இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அறுவை சிகிச்சை, முடநீக்குப் பயிற்சியும் கல்வியும் அளித்தல், மனவளர்ச்சிக் குன்றியோருக்கு மருத்துவம், கல்வி, கண்புரை நோய்க்குத் தீர்வு எனப் பல மருத்துவப் பணிகளையும், சமூகப் பணிகளையும், தமியான் பப்ளிக் பள்ளியின் (CBSE) வழியாக ஏழை எளிய மாணவச்செல்வங்களும் சிறந்த ஆங்கில அறிவைப் பெற கல்விப்பணி என பல்வேறு பணிகள் பற்றியும், இந்நிறுவனங்களின் வளர்ச்சிகள், சந்தித்த சவால்கள், சாதனைகள் பற்றியும்  சதங்கை கலைக்குழு தயாரித்து வழங்கிய சிறு நாடகத்தின் மூலம் அனைத்தும் மிகத் தெளிவாகவும், அர்த்தமுள்ளதாகவும், அங்கு பயிலும் மாணவர்களைக் கொண்டும் நடித்துக்காட்டப்பட்டது. இறுதியில் தமியான் இல்ல தலைமைச்சகோதரி அருட்சகோதரி பெர்க்மான்ஸ் (மான்சா) அவர்கள் இந்நாள் வரை இறைவன் செய்த அனைத்து வியத்தகு செயல்களுக்கும், வந்திருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். விழா இறையருளால் இனிதே நிறைவுபெற்றது.